Monday, 3 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 4)

     ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரில் இடம் பெறும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இறைவன் வருகைக்கு முன்பாக மக்கள் அறிய வேண்டிய உலகியல் உண்மைகளாகும், தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் தீர்க்கதரிசனத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். உண்மையில் தீர்க்கதரிசிகளுக்கும், தீர்க்கதரிசனத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களின் பிறப்பு, அவர்கள் வாழும் யுகம், அவர்கள் மூலம் இறைவன் வெளிப்படுத்தும் உண்மைகள், இவைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு யுக மாற்றத்தின் போதும் அவைகளை மனிதகுலம் கண்டறிந்து தெளிவடைய அவர்களுக்காக இப்புவியில் அவதாரம் செய்யும்படி இறைவன் மனித ஆத்மாக்களை அனுப்பி பிறவி காணச்செய்கிறார். அந்த ஆத்மாக்கள் மூலம் இறைவன் மக்களுக்கு தரும் புனித செய்திகளே பின்னாளில் மக்களால் தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இன்று ஒவ்வொரு மதமும் தனக்குள் தீர்க்கதரிசிகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது, மன்னிக்கவும், மதத்தில் உள்ள மனிதர்களே தங்களை புனிதர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இந்த மதவாத தீர்க்கதரிசிகள், மற்ற சாதாரண மனிதர்கள் கூறும் தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பொதுவாக அவர்கள், இவர்களை “கள்ள தீர்க்கதரிசிகள்” என்று அடையாளமிட்டு புறம் தள்ளுவார்கள். மனிதனுக்குள் கடவுள் பேதம் பார்ப்பதில்லை, ஆனால் கடவுள் நிலைகள் என்று மனிதன் சிலவற்றை வரையறுத்து அதில் தனது சுய நலத்திற்காக பேதம் பார்க்கின்றான், இன்று இது ஒரு சுயநலத்தின் அரிச்சுவடியாகவே மாறிவிட்டதை மக்கள் சமுதாயம் காணலாம். கள்ளத் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்? இவர்களின் சுயலாபம் என்ன? மக்கள் இந்த தீர்க்கதரிசிகளின் பேதத்தில் மறைந்துள்ள உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே எது உண்மையான நிலை? என்று அறிந்த கொள்ளமுடியும்.


     தீர்க்கதரிசனத்தின் புனிதம் இங்கு இவ்வாறு எடுத்துக்கூறுகிறது, அதாவது ஒவ்வொரு தீர்க்கதரிசிகளும் அவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மத அமைப்பை சாராது உரைக்கும் தீர்க்கதரிசனங்களே உண்மையானவை என்றும், அவர்கள் தங்களுடைய அமைப்பையோ, தன்னுடைய மதத்தின் சம்பிரதாயத்தை உயர்திக்கொள்ளவோ (அ) தன்னை மற்றவர்கள் அறியச் செய்யும் படியான தீர்க்கதரிசனங்களை வெளியிட்டாலோ அவர்கள்தான் “போலிகள்” என்று தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் ஒரு உண்மையை எடுத்துக் கூறுகின்றது. மேலும் தீர்க்கதரிசனங்கள் என்றுமே பொய்யாவதில்லை தீர்க்கதரிசிகளே பொய்யாகுகின்றனர், இதுவே உண்மைக்குள் உள்ள ஒரு தீர்க்கமான உண்மையாகும்.



     இன்றைய நான்காவது தீர்க்கதரிசனம் எதுவென்றால் இந்திய திருநாட்டில் ஆன்மிகம் செழித்து வளருவதற்கான நேரம் துவங்கிவிட்டது என்றும், அதே சமயத்தில் காவி ஆடைக்குள் வாழும் கயவர்கள் மறையும் நேரமும் துவங்கிவிட்டது என்றும், இந்திய திருநாட்டில்தான் இறைவனின் அவதாரம் நிகழும் என்றும், அதனை நிருபிக்கும் வகையில் மூன்று மிகப்பெரிய நாடுகளில் நடக்கும் அகழ்வாராய்சியில் கண்டெடுக்கப்படும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் சான்றாக இருக்கும் என்றும், திபெத்திய புத்த சன்னியாசிகள் அதற்கு ஒப்பாக ஒரு தீர்க்கதரிசனத்தை அப்பொழுது நிச்சயம் வெளிப்படுத்துவார்கள் என்று இந்த நான்காம் தீர்க்கதரிசனம் கடவுளின் வருகை இந்தியாவில் என்பதற்கான சான்றாக திகழும் என்றும் அது நிகழ்வதற்கான முன் அறிகுறிகளாக மேற்கண்ட சம்பவங்கள் நிகழக்கூடும் என்று விளக்கம் தருகின்றது.

     நான்காம் தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடில் உள்ள உண்மைகளை உலக நாடுகளே எற்றுக் கொள்ளும் என்றும், அவ்வாறு நடக்கும் சமயத்தில் இந்த தீர்க்கதரிசனம் பூமி மட்டுமின்றி அனைத்து உலகத்திலும் ஒரு ஒளியாக வீற்றிருக்கும் என்றும், அது ஆகாயத்தில் சூரியனை போன்று அப்பொழுது திகழும் என்று தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன.


--இன்னும் தொடரும்
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்





குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment