Wednesday, 7 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 32)



      ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனத்தின் 32-ம் பகுதியாகும். பொதுவாக தீர்க்கதரிசிகளால் இவ்வுலகத்தில் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டு வருகின்றன. அவைகளின் நடைமுறை செயல்களில் அதிகப்படியான நிகழ்வுகளோ () குறைவான நிகழ்வுகளோ நடந்திருக்கலாம். ஆனால் நிகழ்வுகள் நடைபெறாமல் போனதில்லை.

  பல்வேறு நாடுகளுக்கு இடையே பாலமான ஒரு இணைப்பை ஏற்படுத்தக்கூடியவை ஒரே மாதிரியான நிகழ்வுகளின் சம்பவங்களாகும். நிகழ்வுகளுக்கு இடையே ஒற்றுமை காணப்பட்டால் அது இறைவனால் நிகழ்த்தப்படக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


    நாட்டு மக்களும் அவர்களைச் சுற்றியுள்ள சூழல்களும் பெரும்பாலான நாட்கள் எப்படி இருக்கின்றன என்று கவனிக்க வேண்டும் என 32-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது. அதாவது உலக நாடுகளில் உதாரணமாக இந்தியாவில் தற்போது குளிர்காலம் என்றால், ஆஸ்திரேலியாவில் தற்போது என்ன சீதோஷ்ண காலமாக இருக்கும் என பார்க்க வேண்டும். அதாவது உலக நாடுகள் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவாது. இது சாத்தியமில்லாத செயலாகும். அதற்கு வட, தென் துருவங்களின் இயக்க நிலையும், சூரியன், சந்திரன், பூமி இவைகளின் சுழற்சி பங்கீடும் பெரும்பான்மையான காரணங்களாக இருக்கின்றன. ஆகவே பனி, குளிர், மழை, வெயில், காற்று போன்ற சீதோஷ்ண நிலைகள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. ஆனால் 32-ம் தீர்க்கதரிசனம் அவ்வாறு இல்லாமல் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியானசீதோஷ்ண நிலைதற்போது ஏற்பட உள்ளதாக ஒரு குறிப்பை தருகின்றது. இது உலக மக்களுக்கு போதாத காலத்தை உணர்த்துவதாக அமையும் என்று 32-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

   காலத்தின் கோலத்தை படம் பிடித்து முன்கூட்டியே அறிவிப்பதேஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தின் நோக்கமாகும். இவ்வாறு உலகமே ஒரே சீதோஷ்ண நிலையில் நீடித்தால் எண்ணவாகும் என்று 32-ம் தீர்க்கதரிசனம் சில குறிப்புகளைத் தருகிறது. அதாவது உலக மக்களில் பெரும்பாலானோர் நோய்களால் இறக்க நேரிடும், விலங்குகள், தாவரங்கள் அழிய நேரிடும், நீர் மாசுபடும் அதன் பயன்பாடு வெகுவாக குறையும், வெப்ப நிலையில் பெரிய மாறுதல் நிகழும், இதனால் உலக வெப்பமயமாதல் என்ற நிலையில் பல மாற்றங்கள் நிகழக்கூடும். வட, தென்துருவ பனிமலைகளில் பல மாற்றங்கள் நிகழும். சில நேரத்தில் பல கடல்கள் உறைபனி நிலைக்கு செல்லும். பல கடல்களின் நீர்மட்டம் உயர்ந்து நிலத்தில் கடல்நீர் உட்புகுந்து ஓடும் நிலைகூட ஏற்படலாம். இந்த சமயத்தில் வான் மண்டலத்தில் பல வினோத சம்பவங்கள் நிகழும் என்றும், அதனால் உலக மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த உலகமே அழியுமோ? என்ற மனநிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும் என்று 32-ம் தீர்க்கதரிசனம் ஒரு விளக்கத்தை இங்கு தருகின்றது.


      தீர்க்கதரிசனம் நடைபெறும் சமயத்தில் உலகமே வியப்படையும் வகையில் இந்தியாவில் ஒரு கடல்பகுதி உயர்ந்தும், இமயமலையின் ஒரு பகுதி தாழும் நிலையும் உடனே ஏற்படும் என்றும், இதனால் இந்திய தேசத்தில் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்று 32-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


        32-ம் தீர்க்கதரிசனம் நடைபெறும் அதேவேளையில் எகிப்திய பிரமீடு ஒன்று பூமியை பிளந்து கொண்டு வெளிவரும் சம்பவம் நடைபெறும் என்றும், நைல் நதி எகிப்திய தேசம் முழுவதும் கிளைகளாக பிரிந்து நீண்டு ஓடும் நிலை ஏற்படும் என்று 32-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

               கற்கால மனிதர்கள் வாழ்ந்த ஒரு தேசம் கடல் மட்டத்திலிருந்து மேலே வரும் நிகழ்வு இந்த 32-ம் தீர்க்கதரிசனம் நடைபெறும் சமயத்தில்தான் நடக்க உள்ளதாக மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

      பஞ்சபாண்டவர் மறைந்து வாழ்ந்த ஒரு தேசம் (சிறு பகுதி) இந்திய தேசத்தில் கண்டறியப்படும் என்றும், அவர்களின் மறுபிரவேசம் இப்பூமியில் வெகு சீக்கிரத்தில் நிகழக்கூடும் என்பதற்கு இந்த நிகழ்வே காரணமாக அமையும் என்று 32-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment